உலக ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 81வது இடம்

உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது.

Update: 2018-02-22 11:14 GMT
புதுடெல்லி

உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது. 2017 ம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை "டிரான்பரன்சி இன்டர்நேஷனல்" வெளியிட்டுள்ளது.

மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், பொதுத்துறையில் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டில் ஊழல் அதிகம் நிறைந்த 176 நாடுகளின் பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது. 2017 ம் ஆண்டில் 180 ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடம் வகிக்கிறது. 

இது குறித்து டிரான்பாரன்சி இன்டர்நேஷனல் கூறுகையில், ஆசிய பசிபிக் நாடுகளில் பத்திரிக்கைகள், சமூக அமைப்புக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சட்ட அமலாக்க அலுவலர்கள் அல்லது பாதுகாப்புத்துறையை சேர்ந்தவர்கள் ஆட்சியாளர்களால் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் கூட ஊழல் அதிகம் பரவ காரணமாக அமைகிறது. 

பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு போன்ற நாடுகள் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் ஊழல் அதிகமும், பத்திரிக்கை சுதந்திரம் குறைவாகவும் உள்ளது. இந்த நாடுகளில் தான் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகமாக உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்த நாடுகளில் ஊழலுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்ட 15 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து , டென்மார்க் நாடுகள் முதலிடத்தில் உள்ளன. சிரியா, தெற்கு சூடான், சோமாலியா போன்ற நாடுகள் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள். இந்த பட்டியலில் சீனா 77 வது இடத்திலும், பிரேசில் 96 வது இடத்திலும், ரஷ்யா 135 வது இடத்திலும் உள்ளது.

மேலும் செய்திகள்