காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் மத்திய அமைச்சர்கள் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உறுதி

காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உறுதியளித்து உள்ளனர். #CauveryManagementBoard

Update: 2018-03-19 12:13 GMT

புதுடெல்லி,

 
காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கான தண்ணீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன் மத்திய அரசு டெல்லியில் ஆலோசனை நடத்தியது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.  மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் பேசுகையில், கூட்டத்தில் பங்கேற்ற நான்கு மாநிலங்களின் அதிகாரிகளுடன், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அமைக்க வேண்டிய அமைப்பு குறித்த கட்டமைப்பு, அதன் பொறுப்புகள், அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையானது தமிழகத்தில் வலுத்து உள்ளது.

பாராளுமன்றத்திலும் தமிழக அரசியல் கட்சி உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். மத்திய அரசும் அதற்கான பணிகளில் இறங்கி உள்ளது என கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக பதில் கிடைக்கவில்லை. இன்று அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமான வாக்குறுதி கிடைக்கும் வரையில் பாராளுமன்றத்தில் எங்களுடைய போராட்டம் தொடரும் என்றார். 

இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களிடம் உறுதி அளித்து உள்ளனர் என செய்தி வெளியாகி உள்ளது.  

மேலும் செய்திகள்