சத்ரபதி சிவாஜி சிலையின் உயரத்தில் மாற்றம் செய்ய அரசு திட்டம்

விலை சுமையை குறைக்க அரபி கடல் பகுதியில் அமையவுள்ள சத்ரபதி சிவாஜியின் நினைவாக எழுப்பப்படும் சிலையின் உயரம் குறைக்கப்படுகிறது.

Update: 2018-07-17 13:42 GMT

மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 2016ம் ஆண்டில் அரபி கடல் பகுதியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவாக எழுப்பப்படும் சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதற்காக இந்த வருடம் மார்ச்சில் தனியார் நிறுவனம் ஒன்றுடன் ரூ.2,500 கோடி அளவிற்கு திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த நிலையில், திட்ட விலை சுமையை குறைக்க சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் குறைக்கப்படுகிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கிடைத்த தகவலில் தெரிய வந்துள்ளது.

சிவாஜி சிலையின் உயரம் திட்டத்தின்படி 83.2 மீட்டர் என இருந்தது.  அதில் 7.5 மீட்டர் குறைக்கப்பட்டு 75.7 அடியாக சிலை உருவாகிறது.  அதனுடன் அவர் கையில் உள்ள வாளின் உயரம் திட்டத்தினை விட அதிக உயரம் கொண்டிருக்கும்.  அதன் உயரம் 38 மீட்டரில் இருந்து 45.5 மீட்டராக நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எனினும், இதனால் சிலையின் மொத்த உயரம் 121.2 மீட்டர் என்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதேபோன்று சிலையின் பீடத்தின் உயரம் 96.2 மீட்டரில் இருந்து 87.4 மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.  பீட உயரத்தில் செய்துள்ள மாற்றத்தினால் ரூ.338.94 கோடி மிச்சப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்