முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2018-09-24 09:56 GMT

மும்பை,


முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது.  ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக நிலுவையில் உள்ளது. கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. 

இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது. எனவே முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் முதலாவதாக, முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம். இரண்டாவதாக, முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம். மூன்றாவதாக, முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்நிலையில் முத்தலாக் அவசர சட்டத்துக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் கவுன்சிலர் மற்றும் சமூக பணியாளர் மசூத் அன்சாரி, 'ரைசிங் குரல் ஃபவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம், வழக்கறிஞர் தேவேந்திர மிஸ்ரா ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அவசரச்சட்டத்தில் உள்ள விதிமுறைகள் சட்டவிரோதமானது, நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு 28-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மனுதாரர்களின் வழக்கறிஞர் தன்வீர் நிஜாம் பேசுகையில், “இஸ்லாமிய மதத்தில் ஆண்களை குறிவைப்பது போன்று சட்டத்தில் விதிகள் இடம்பெற்றுள்ளது. இஸ்லாமிய ஆண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்,” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்