சத்தீஸ்கரில் 2 இடங்களில் என்கவுண்டர்; 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியிலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.;

Update:2026-01-03 16:37 IST

ராய்பூர்,

சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தலாக இருந்து வந்தனர். அவர்களை ஒழிக்கும் பணிகளில் மத்திய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த இரண்டு என்கவுண்டர் சம்பவங்களில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் போலீசார் இன்று அதிகளவில் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். அவர்களைப் பார்த்ததும் மறைந்து இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.பாதுகாப்புப் படை வீரர்கள் பதில்தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய அதிரடியான தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். தொடர்ந்து அந்தப் பகுதியில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியிலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இந்த ரகசிய தகவல் அடிப்படையில் பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு சென்று அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு என்கவுண்டர் சம்பவங்களில் இருந்து 14 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுக்மாவில் நடந்த அதிரடி தாக்குதல் மூலம் கோண்டா பகுதி நக்சலைட்டுகள் குழு கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சத்தீஸ்கரில் கடந்த ஆண்டில் 285 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்