பிப்ரவரி மாதத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு உறுதி

தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

Update: 2018-10-24 11:18 GMT
புதுடெல்லி,

முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் என பொது ஊழியர்கள் செய்யும் ஊழல்களை விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை.

இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில்  பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.  வழக்கு விசாரணையின்போது, லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், லோக் ஆயுக்தா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா அமைக்காதது குறித்து தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்  கண்டனம் தெரிவித்தது. மேலும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிற்பகல் 2 மணிக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து பிற்பகல் மீண்டும் விசாரணை தொடங்கியபோது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிப்ரவரி மாதத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசுக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. 

மேலும் செய்திகள்