சிறையில் இருந்தபடியே, தொலைதூர கல்வி மூலம் கன்னடம் கற்க சசிகலா ஆர்வம்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்தபடியே, தொலைதூர கல்வி மூலம் கன்னடம் கற்க சசிகலா ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2018-10-25 21:50 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தொடக்கத்தில் சசிகலா, சக கைதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கன்னடத்தில் பேச சிரமப்பட்டார். பின்னர் அவர் சிறையில், வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தின் கீழ் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு கன்னடம் பயில தொடங் கினார்.

இதன்மூலம் சசிகலா தற்போது கன்னட மொழி பேசுவதுடன், கன்னடத்தில் பிறர் பேசுவதையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு திறமையை வளர்த்து கொண்டுள்ளார். அத்துடன் அவர் கம்ப்யூட்டர் உள்பட வேறு சிலவற்றிலும் திறமையை மேம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சான்றிதழ் படிப்பு படிக்க ஆர்வம்

இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலம் சான்றிதழுடன் கூடிய படிப்புகளை படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சிறையில் பேராசிரியர்கள் பாடங்கள் நடத்துவதுடன், அங்கேயே தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொலைதூர கல்வி மூலம் சான்றிதழுடன் கூடிய ஒரு ஆண்டுக்கான கன்னட மொழி படிப்பை பயில்வதற்கான ஆர்வத்தை சசிகலா வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்குனரும், பேராசிரியருமான மைலாரப்பா கூறுகையில், ‘சான்றிதழுடன் கூடிய கன்னட மொழி படிப்பை பயில சசிகலா ஆர்வமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நாளை (சனிக்கிழமை) சிறைக்கு சென்று தொலைதூர கல்வி பயில ஆர்வமாக உள்ள கைதிகளுக்கான சேர்க்கையை நடத்த இருக்கிறேன். இந்த வேளையில் சசிகலாவை சந்தித்து அவர் படிக்க விரும்பும் படிப்பு பற்றி எடுத்து கூறுவோம். அவர் விரும்பினால் சேர்க்கை படிவத்தில் கையெழுத்து பெற்று அவரையும் சேர்த்துக் கொள்வோம்’ என்றார்.

மேலும் செய்திகள்