“எனது அரசை சீர்குலைக்க முயற்சி” - மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

எனது அரசை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என்று மத்திய அரசு மீது ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

Update: 2018-10-26 22:45 GMT
அமராவதி,

ஆந்திர மாநிலம் அமராவதி நகரில் நேற்று நடந்த 2-ம் நாள் கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசும்போது மத்திய அரசை ஆவேசமாக தாக்கிப் பேசினார்.

அவர் கூறியதாவது:-

மாநிலத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் வரும் காலங்களில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு அமைதியற்ற சூழலை அவர்கள் உருவாக்கலாம் என்ற அச்சம் எழுகிறது.

மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை மோடி அரசு நிறைவேற்றாததால் ஆந்திராவுக்கு அதிக நெருக்கடி தருகிறது. ஆந்திர அரசை மிரட்டுகிறது. தொந்தரவும் அளிக்கிறது.

மாநிலம் முழுவதும் தொழில் அதிபர்களை குறி வைத்து வருமான வரி சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆந்திராவில் தொடர்ச்சியாக இதுபோல் 3-வது முறையாக சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக் கப்பட்டு இருக்கின்றனர். தொழில் அதிபர்கள் ஆந்திராவில் தொழில் முதலீடு செய்வதற்கு அச்சுறுத்தப்படுகிறார்கள். இது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி.யை டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு கவர்னர் விசாரித்து அறிந்து இருக்கிறார். ஆனால் டி.ஜி.பி.யிடம் பேசுவதற்கு பதிலாக கவர்னர் முறைப்படி என்னிடம் தொடர்பு கொண்டு தகவலை கேட்டிருக்க வேண்டும்.

ஜெகன் மோகன் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து ஒரு நாடகம். சம்பவம் நடந்த பிறகு புகார் செய்யாமல் அவர் சென்றது குற்றம். ஜெகன் மோகனை தாக்கியவரே தான் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தொண்டர் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இது தெரியாமல் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பலரும் பேசுவது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகள்