597 அடி உயர படேல் சிலையை 10 நாட்களில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்

597 அடி உயர படேல் சிலையை, 10 நாட்களில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-11 21:30 GMT
வதோதரா,

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தில் உள்ள கெவாடியா கிராமத்தில் சர்தார் சரோவர் அணை அருகே 182 மீட்டர்(597 அடி) உயர சிலை அமைக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை கடந்த மாதம் 31-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன்பின்னர் இந்த சிலை கடந்த 1-ந்தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது.

அன்று முதல் நேற்று முன்தினம் வரையிலான 10 நாட்களில் படேல் சிலையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் அதிக பட்சமாக 28,409 பேர் பார்வையிட்டு உள்ளனர்.

இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த குஜராத் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் எஸ்.ஜே.ஹைதர் கூறுகையில், ‘இதனால் குஜராத்தின் சுற்றுலா பயணிகளின் தற்போதைய ஆண்டு வருகையை 5.2 கோடியில் இருந்து 6 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்