5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? தெலுங்கானா, ராஜஸ்தானில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை

தெலுங்கானா, ராஜஸ்தானில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது 11-ந் தேதி நடக்க உள்ள ஓட்டு எண்ணிக்கையில் தெரியவரும்.

Update: 2018-12-07 23:30 GMT
புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக 5 மாநில சட்டசபை தேர்தல் கருதப்படுகிறது. எனவே இந்த தேர்தல், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் முடிந்து விட்டது.

119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம் கூட்டணி, பாரதீய ஜனதா ஆகியவற்றுக்கிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு சந்திரசேகரராவ், சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோரின் பிரசாரத்தில் அனல் பறந்தது.

அந்த மாநிலத்தில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்கள் களம் இறங்கினர்.

நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. 2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1½ லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியை கவனித்தனர். முதல் முறையாக இங்கு வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதி செய்வதற்கான ஒப்புகைச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஓட்டுப்பதிவு தொடங்கியது முதல் கிராமப்புறங்களில் விறுவிறுப்பாக காணப்பட்டது. ஐதராபாத் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது. ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், விரும்பத்தகாத சம்பவம் ஏதும் இல்லை.

கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மாநில பா.ஜனதா தலைவர் கே.லட்சுமன், காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி ஆகியோர் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட்டனர்.

முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஐதராபாத் அருகேயுள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து, தனது காஜ்வெல் தொகுதியில், சிந்தமடக்கா வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் அலை வீசுகிறது” என குறிப்பிட்டார்.

தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா, ‘பாகுபலி’ பட புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை விஜயசாந்தி உள்ளிட்டோர் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு செய்தனர்.

கல்வாகுர்தி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வம்சிசந்த் ரெட்டி, ஓட்டுப்பதிவை பார்வையிட சென்றபோது பா.ஜனதா தொண்டர்களால் கல்வீசி தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிட்யால் என்ற இடத்தில் நரசிம்மா என்ற மூத்த வாக்காளர் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா குட்டா தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என புகார் செய்தார்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு முடிந்தது. பிற தொகுதிகளில் மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு அடைந்தது.

இறுதியில் அங்கு 67 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறுகிற ராஜஸ்தானில் கேரளாவைப்போல ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதா கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த கட்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமித் ஷா புயல்வேக பிரசாரம் செய்தனர்.

காங்கிரசுக்கு ராகுல் காந்தி, முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், பஞ்சாப் மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரரருமான சித்து ஆகியோர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இங்கு 200 தொகுதிகள் உள்ளன. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமன் சிங் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் ஒத்தி போடப்பட்டது. எஞ்சிய 199 தொகுதிகளில் நேற்று ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. 2,274 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க, 4 கோடியே 74 லட்சம் வாக்காளர்களுக்காக 51 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அங்கு நீண்ட வரிசையில் நின்ற வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்தனர். காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது முதல் மாலை 5 மணி வரையிலும் விறுவிறுப்பாகவே நடைபெற்றது.

முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தங்கள் வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு செய்தனர்.

சில இடங்களில் மோதல்கள், தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. கொலாயட்-பிக்கானிர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பூனம் கன்வர் பட்டி, காங்கிரஸ் வேட்பாளர் பன்வர் சிங் பட்டி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். தீக் நகரில் வாக்குச்சாவடிக்கு வெளியே ஒரு கத்திக்குத்து சம்பவமும் நடந்தது. பதேப்பூரில் 2 தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்த போது 72.62 சதவீத ஓட்டுப்பதிவாகி இருந்தது.

தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களுடன் தெலுங்கானா, ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலில் இந்த மாநிலங்களில் ஆட்சி நடத்தப்போவது யார் என தெரிய வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்