கர்நாடகா: கோவில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வு

கர்நாடகாவில் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-12-14 17:34 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் சுல்வாடி கிராமத்தில் கிச்சு மாரம்மன் கோவில் அமைந்துள்ளது . இன்று சிறப்பு பூஜைகள் முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி குமாரசாமியின் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டு அதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்