மராட்டியத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியால் மயானம் மூடல், 3 திருமணங்களும் ரத்து

மராட்டியத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியால் மயானம் மூடப்பட்டது.

Update: 2018-12-19 09:09 GMT

தானே, 


பிரதமர் நரேந்திர மோடி நேற்று மராட்டியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். இதில் தானே மாவட்டம் கல்யாணில் உள்ள பத்கே மைதானத்தில் நடந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இதனால் அந்த பகுதி போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சிலநாட்களாக அங்கிருந்த கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். 

 பத்கே  மைதானத்தின் அருகிலேயே லால்சவுக்கி மயானம் அமைந்துள்ளது. பிரதமர் கலந்துகொள்ளும் விழா நடப்பதையொட்டி நேற்று இந்த மயானத்தில் உடல் அடக்கம் எதுவும் நடைபெறாது என கல்யாண்–டோம்பிவிலி மாநகராட்சி திடீரென அறிவித்தது. 

இதன்படி நேற்று மாநகராட்சி ஊழியர்கள் இந்த மயானத்தை இழுத்து மூடினர். அங்கிருந்து 1½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்துக்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் பிரதமர் நிகழ்ச்சியையொட்டி அருகில் உள்ள வாத்வா மண்டபத்தில் நேற்று நடக்க இருந்த 3 திருமண நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்