நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி: உச்சநீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.

Update: 2019-02-20 05:42 GMT
புதுடெல்லி,

ஸ்வீடன் நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனம் எரிக்ஸன். இந்த நிறுவனம், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க ரூ.2014-ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டி இருந்தது.

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி கடனில் இருப்பதால், உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின்படி, ரூ.550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் நிறுவனம் சம்மதித்தது. கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரூ.550 கோடியை வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 120 நாட்கள் அவகாசத்தை அளித்தது. அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.550 கோடியை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும்.

இந்த தொகையை செப்டம்பர் 30-ம்தேதிக்குள் செலுத்துவதாக ரிலையன்ஸ் நிறுவனமும் உறுதியளித்து இருந்தது. ஆனால், அந்த தேதி முடிவடைந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அந்தத் தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்தவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி, மற்ற இரு அதிகாரிகள் மீது தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களும் குற்றவாளி என அறிவித்தது. மேலும், 4 வார காலத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை வழங்க வேண்டும் என்றும் இல்லாவிடில், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தது. அதேபோல், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் தலா ரூ.1 கோடியை ஒருமாதத்திற்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்தது. 

மேலும் செய்திகள்