மோடியின் புதிய மந்திரி சபையில் யார்-யாருக்கு இடம்? பரபரப்பான தகவல்கள்

நரேந்திர மோடியின் புதிய மந்திரி சபையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-05-26 23:15 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்கிறார். ஆனால் அவருடன் பதவி ஏற்க இருக்கும் மத்திய மந்திரிகள் யார் என்ற பட்டியல் வெளியிடப்படவில்லை.எனவே புதிய மந்திரி சபையில் யார் எல்லாம் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முந்தைய மந்திரி சபையில் இருந்த முக்கியமான மந்திரிகள் மீண்டும் மந்திரிசபையில் இடம்பெறுவார்கள் என்று சில தலைவர்கள் தெரிவித்தனர்.

நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி உடல்நிலை காரணமாக பதவி ஏற்கமாட்டார் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசும், நெருங்கிய நண்பர்களும் அருண்ஜெட்லி நன்றாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். அவர் சிகிச்சையின் மூலம் வேகமாக தேறி வருவதாகவும் கூறினர். ஆனாலும் அவர் மந்திரி சபையில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முந்தைய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த ராஜ்நாத் சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் மீண்டும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மந்திரி சபையில் இடம் பெற்று இருந்தார். ஆனால் இந்த முறை அவரது மகன் சிராக் பஸ்வானுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ளனர்.

மற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் குறைந்தபட்சம் ஒரு கேபினட் மந்திரி பதவியும், ஒரு இணை மந்திரி பதவியும் கேட்பதாக தெரிகிறது.

பா.ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. கடந்த மந்திரிசபையில் இடம்பெறவில்லை. இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜனதா கூட்டணியில் உள்ள முக்கியமான திராவிட கட்சி என்பதால் அக்கட்சிக்கு ஒரு மந்திரி பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் பா.ஜனதா இந்த தேர்தலில் மேற்குவங்காளம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வலுவாக காலூன்றி உள்ளது. மேற்குவங்காளத்தில் 18 தொகுதிகளிலும் (கடந்த தேர்தலில் 2), தெலுங்கானாவில் 4 தொகுதிகளிலும் (கடந்த தேர்தலில் 1) வெற்றி பெற்றுள்ளது.

எனவே அந்த மாநிலங்களுக்கும் மந்திரிசபையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பா.ஜனதா முடிவெடுத்துள்ளது. அந்த 2 மாநிலங்களிலும் வெற்றி பெற்ற சிலர் மத்திய மந்திரிகள் ஆவார்கள்.

மேலும் செய்திகள்