டெல்லியில் மிக மோசமான நிலையில் காற்றின் தரம்.. பள்ளிகள் ஆன்லைனுக்கு வகுப்புக்கு மாற்றம்
மக்கள் மூச்சு விட சிரமப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.;
புதுடெல்லி,
டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குளிர் காலங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகரிக்கிறது. பட்டாசு வெடிப்பு, வாகனங்களின் புகை வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் காற்று மாசு அதிகரிக்கிறது.
மக்கள் மூச்சு விட சிரமப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. காற்று தர குறியீட்டு எண் அடிப்படையில், காற்று மாசு அளவை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீர்மானிக்கிறது.
பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால், ‘நன்று’ என்று அர்த்தம். 51 முதல் 100 வரை இருந்தால் ‘திருப்தி’ என்று அர்த்தம். 101 முதல் 200 வரை இருந்தால் ‘மிதமானது’ என்று அர்த்தம். 201 முதல் 300 வரை இருந்தால், ‘மோசம்’ என்று அர்த்தம். 301 முதல் 400 வரை இருந்தால் ‘மிக மோசம்’ என்று அர்த்தம். 401 முதல் 500 வரை இருந்தால் ‘மிக மிக மோசம்’ என்று அர்த்தம்.
இந்நிலையில், நேற்று காற்று தர குறியீட்டு எண் 459 ஆக பதிவானது. எனவே, காற்று மாசு மிக மிக மோசமான நிலையை அடைந்தது. நகரில் இரவு நேரத்தில் அடர்த்தியான புகை மண்டலம் காட்சியளித்தது. மக்கள் சுவாசிக்க சிரமப்பட்டனர்.
காற்றின் தரம் மிக மிக மோசமாக இருப்பதால், டெல்லியில் பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரையும், 11-ம் வகுப்புக்கும் நேரடியாகவும், ஆன்லைனிலும் கலந்து நடத்துமாறு கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, டெல்லி, அதைச் சுற்றியுள்ள அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பி.எஸ்.4 ரகம் மற்றும் அதற்கு குறைவான ரகத்திலான கனரக டீசல் லாரிகள் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் லாரிகளும் மட்டும் நகருக்குள் நுழையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளை மூடுவது பற்றி பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.