குல்பூ‌ஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

குல்பூ‌ஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-07-18 12:10 GMT
குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை சர்வதேச கோர்ட்டு நிறுத்தி வைத்து நேற்று தீர்ப்பு அளித்தது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் மத்திய அரசின் சார்பில் வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் பேசுகையில்,  குல்பூ‌ஷண் ஜாதவ் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.  தூதரக தொடர்புக்கு கூட அனுமதிக்கவில்லை. அதனால் நாம் சர்வதேச கோர்ட்டை நாடினோம். அங்கு தற்காலிகமாக முதலில் மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிரந்தர நிவாரணத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சர்வதேச கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கியது. 15 நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பை வழங்கி உள்ளனர். எதிர் கருத்தை வெளிப்படுத்திய ஒரே நீதிபதி பாகிஸ்தானை சேர்ந்தவர். சர்வதேச கோர்ட்டு கூறியுள்ளபடி, மேலும் தாமதப்படுத்தாமல், ஜாதவின் உரிமைகள் குறித்து அறிவிக்க வேண்டிய கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. அவருக்கு இந்தியா தூதரக தொடர்பு வழங்கவும் பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளது. சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம். ஜாதவ், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நிரபராதி. அவரை உடனடியாக விடுவித்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கிறோம். அவரது குடும்பத்தாருக்கு நமது வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். 

கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் முன்மாதிரியான தைரியத்தை காட்டி உள்ளனர். ஜாதவின் பாதுகாப்பையும், நல்வாழ்வையும், அவர் இந்தியாவுக்கு விரைவில் திரும்புவதையும் உறுதிப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் அரசு தீவிரமாக தொடரும் எனக் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்