மாநிலங்களவையில் மோட்டார் வாகன மசோதா நிறைவேறியது

மாநிலங்களவையில் மோட்டார் வாகன மசோதா நிறைவேறியது. அதில் விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-31 21:45 GMT
புதுடெல்லி,

போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதுடன், விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் கடந்த 23-ந் தேதி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் நேற்று 108 உறுப்பினர் ஆதரவுடன் நிறைவேறியது. எதிர்த்து 13 ஓட்டுகள் விழுந்தன.

மோட்டார் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கு காரணமானவருக்கு ரூ.5 லட்சம் வரையும், படுகாயம் ஏற்படுத்தினால் ரூ.2½ லட்சம் வரையும் அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இதைப்போல லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரமும், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட பின்னரும் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் என அதிகபட்ச அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, மாநிலங்களின் உரிமை பறிக்கப்படாது என உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்