ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

ஜம்மு காஷ்மீரை 2-ஆக பிரிக்கும் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-08-05 13:32 GMT

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில்மசோதாக்களை அமித் ஷா அறிமுகப்படுத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்ய வகை செய்யும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மசோதா மீது விவாதம் நடைபெற்றது.  விவாதத்துக்கு பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது.  மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.  தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓட்டுச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து,   சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.   மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 61 வாக்குகளும் பதிவாகின.  மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்