முதலாவது நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

வாஜ்பாயின் முதலாவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-08-16 02:12 GMT
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மறைந்தார்.

அவர் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி பிறந்தார். பா.ஜனதாவின் முதலாவது பிரதமர் அவரே ஆவார். கடந்த 1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998-1999-ம் ஆண்டுகளில் 13 மாதங்களும், பின்னர் 1999 முதல் 2004-ம் ஆண்டுவரையும் 3 தடவை அவர் பிரதமர் பதவி வகித்துள்ளார்.

வாஜ்பாயின் முதலாவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘சடைவ் அடல்’ என்ற வாஜ்பாய் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த நினைவிடத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகள் ஆகியோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அங்கு ஆன்மிக பாடல்களும் பாடப்பட்டன.

வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி, பா.ஜனதாவின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவரது கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், “இந்தியா என்பது வெறும் நிலங்களின் தொகுப்போ, எல்லையால் நிர்ணயிக்கப்பட்ட நாடோ அல்ல. வாழும் தேசிய சக்தி” என்ற கவிதையும் அடங்கும்.


மேலும் செய்திகள்