லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக, தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ காரணமாக இருந்தாரா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Update: 2019-08-24 22:06 GMT
கொச்சி,

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள நிலையில், சதி செயலுக்கு திட்டமிட்டதாக கருதப்படும் கேரள வாலிபர், இளம்பெண்ணுடன் கொச்சியில் பிடிபட்டார். இதையடுத்து, அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூர் அருகே உள்ள மாடவனா பகுதியை சேர்ந்தவர் ரகீம் கொல்லியல் என்கிற அப்துல் காதர் (வயது 29). இவர் பக்ரைன் நாட்டில் தொழில் செய்து வந்தார். அப்துல் காதர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு உதவி வந்ததாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்துல்காதரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இந்தியா முழுவதும் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 பயங்கரவாதிகளுக்கும், அப்துல்காதருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு வழிகாட்டியாக அவர் செயல்படுவதாகவும் கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி அப்துல்காதரை கேரள போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே, பக்ரைன் நாட்டில் இருந்து அப்துல் காதர் நேற்று கொச்சி விமானநிலையம் வந்தார். போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் அப்துல் காதரும், ஒரு இளம்பெண்ணும் நேற்று மதியம் கொச்சியில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் சரண் அடைவதற்காக வக்கீலுடன் வந்தனர். அப்போது அங்கு தயாராக இருந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 2 பேரையும் மடக்கிபிடித்து கைது செய்தனர். அப்துல்காதருடன் பிடிபட்ட இளம்பெண், வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் ஆவார்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்துல்காதரை கைது செய்தபோது, அவர் தனக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அப்துல்காதர் கூறும்போது, எர்ணாகுளத்தில் முன்பு ஒர்க்‌ஷாப் நடத்தி வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால், பக்ரைனுக்கு சென்று தொழில் செய்ததாகவும் அங்கும் நஷ்டம் ஏற்பட்டதால் கேரளா திரும்ப திட்டமிட்டதாகவும், பக்ரைனில் சிலருக்கு பணம் கொடுக்க வேண்டியது இருந்தது. 60 கிலோ எடையுள்ள வாகன உதிரிபாகங்களை கேரளாவுக்கு கொண்டு வந்து விற்று பணம் கொடுக்கலாம் என்று இருந்த நிலையில், பணம் கொடுக்க வேண்டிய சிலர் வேண்டும் என்றே தன்னை பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தகவல் பரப்பிவிட்டனர். தனக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்துல்காதர் கூறும் தகவல் உண்மைதானா? அவருடன் பிடிபட்ட இளம்பெண் யார்? இருவரும் சேர்ந்து சதி செய்ய திட்டமிட்டனரா? என்று விசாரணை நடைபெறுகிறது. மேலும், பிடிபட்ட அப்துல்காதரையும், இளம்பெண்ணையும் கேரளாவில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இருவரையும் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். பிடிபட்ட அப்துல்காதர், பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற ஒருவருக்கு கேரளாவில் இருந்து தமிழகத்தில் ஊடுருவ தனது வாகனத்தை கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பயங்கரவாதி என்று சந்தேகப்படும் வாலிபர் கொச்சியில் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்