டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரும் மனு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரும் மனு தொடர்பாக, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-06 18:57 GMT
புதுடெல்லி,

அசோசியேஷன் ஆப் ஹெல்த்கேர் புரொவைடர்ஸ் என்ற அமைப்பின் தமிழக கிளையின் தலைவர் குருசங்கர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நாடு முழுவதும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்கள் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது மட்டும் அல்லாமல் ஆஸ்பத்திரிகளும் தகர்க்கப்படுகின்றன. இது டாக்டர்களுக்கும், ஆஸ்பத்திரிகளுக்கும் பாதுகாப்பு அற்ற சூழலை உருவாக்குகிறது. எனவே, இதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.சுப்பிரமணியம் ஆஜராகி வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை, மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்