பாலக்காடு அருகே மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

பாலக்காடு அருகே பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2019-10-29 08:36 GMT
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள அடர்ந்த வனம் மற்றும் மலைப்பகுதிகளில் பதுங்கி வாழும் மாவோயிஸ்டுகள், அவ்வப்போது ஆதிவாசி கிராமங்களுக்குள் புகுந்து, கிராம மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை அரசுக்கு எதிராக திசை திருப்புகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு, மலப்புரம் உள்பட இந்தியாவில் உள்ள 30 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதையடுத்து 3 மாவட்டங்களிலும் 250 போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கேரள மாநில தண்டர்போல்ட் என்று அழைக்கப்படும் சிறப்பு அதிரடிப்படையினரும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் வனத்துறையினருடன் இணைந்து மாவோயிஸ்டை தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது அட்டப்பாடியின் மஞ்சிகண்டி பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதையடுத்து பதிலுக்கு தண்டர்போல்ட் போலீசாரும் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். 1 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில், பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. இதில் போலீசாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

மேலும் கொல்லப்பட்டவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் கார்த்தி, அரவிந்த், ஸ்ரீமதி என்பது தெரியவந்தது.

இவர்களில் கார்த்தி, அரவிந்த் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சென்னையை சேர்ந்த கார்த்தி, நந்தனம் கலைக்கல்லூரியில் படித்தவர். போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியான ஸ்ரீமதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 

நேற்று துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிச் சென்ற  ஒரு மாவோயிஸ்டு உடல் காயங்களுடன்   காட்டுப்பகுதியில் இன்று கண்டெடுக்கப்பட்டது.  இந்த உடல் மாவோயிஸ்டுகளின் தலைவர்  மணிவாசகத்தின் உடல் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக அட்டப்பாடி பிராந்தியத்தில் செயல்பட்டு வந்த மணிவாசகம் சமீபத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு  இருந்தார்.
மாணிக்கவாசகம் அட்டப்பாடி பகுதியில் மாவோயிஸ்டு குழுக்களை இயக்கி வந்தார்.

மேலும் செய்திகள்