பட்னாவிஸ் தலைமையிலான அரசு விரைவில் அமைக்கப்படும் : மராட்டிய மந்திரி

மராட்டியத்தில் பட்னாவிஸ் தலைமையிலான அரசு விரைவில் அமைக்கப்படும் என்று அம்மாநில மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-05 12:28 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது. இதனால் மராட்டிய மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 

இந்த நிலையில், மராட்டிய பாஜகவின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மராட்டிய மந்திரி சந்திரகாந்த் பாட்டீல்,  மராட்டிய மக்கள் பாஜக- சிவசேனா கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர். எனினும், சிவசேனா தற்போது வரை எந்த திட்டத்தையும்  முன்மொழியவில்லை. சிவசேனாவுக்காக பாஜகவின் கதவுகள் 24 மணி நேரமும் திறந்தே உள்ளன. தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு விரைவில் ஆட்சி அமைக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார். 

மராட்டிய சட்டமன்ற தேர்தலில், பாஜக 105 இடங்களும், சிவசேனா 56 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் 54 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்றுள்ளன. எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், பாஜக- சிவசேனா கூட்டணியில் அதிகார பகிர்வில் மோதல் வெடித்து வருகிறது.

மேலும் செய்திகள்