3-வது முறையாக முதல்-மந்திரி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால், 16-ந் தேதி பதவி ஏற்பு

அரவிந்த் கெஜ்ரிவால், 3-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக 16-ந் தேதி பதவி ஏற்கிறார்.

Update: 2020-02-12 23:00 GMT
புதுடெல்லி, 

டெல்லி சட்டசபை தேர்தல், கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றியது.

பா.ஜனதா 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தைக்கூட பிடிக்கவில்லை.

தேர்வு

இதைத்தொடர்ந்து, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் அனில் பைஜாலை சந்தித்தார். இச்சந்திப்பு 15 நிமிட நேரம் நீடித்தது. பதவி ஏற்பு விழா குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.

பின்னர், டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரி) அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் அடிப்படையில், அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

16-ந் தேதி பதவி ஏற்பு

அரவிந்த் கெஜ்ரிவால், வருகிற 16-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் முதல்-மந்திரி ஆவது, இது தொடர்ந்து 3-வது தடவை ஆகும்.

காலை 10 மணிக்கு டெல்லி ராமலீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழா, பிரமாண்டமாக நடக்கிறது. பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் எல்லா கேபினட் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள்.

இந்த தகவல்களை ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா நிருபர்களிடம் தெரிவித்தார். பதவி ஏற்பு விழாவில், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் செய்திகள்