மராட்டியத்தில் 26 பேருக்கு வைரஸ் பாதிப்பு; சுகாதார மந்திரி ராஜேஷ் தோப்

மராட்டியத்தில் 26 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுகாதார மந்திரி ராஜேஷ் தோப் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-03-14 16:51 GMT
புனே,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.  கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436ஐ தாண்டியுள்ளது.  உலகெங்கிலும் 145 நாடுகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 810க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து உள்ளது.  67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் உள்பட 87 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த 87 பேருடனும் தொடர்புடைய 4 ஆயிரம் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது.  இந்நிலையில், மராட்டியத்தில் 26 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோப் தெரிவித்து உள்ளார்.

மராட்டியத்தில் நகர்ப்புற பகுதிகளில் அமைந்த அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் வருகிற 31ந்தேதி வரை மூடப்படுகின்றன.

10, 12 மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் முன்பே அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசை தொற்றுநோய் என்று உத்தரகாண்ட் அரசாங்கம் அறிவித்துள்ளது.  இதேபோன்று உத்தரகாண்டில் அனைத்து திரையரங்குகள் மற்றும் கல்லூரிகள் வருகிற 31ந்தேதி வரை மூடப்படுகின்றன.  எனினும், மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து திறந்திருக்கும் என உத்தரகாண்ட் மந்திரி மதன் கவுசிக் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்