அசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி; மீட்புப்பணிகள் தீவிரம்

அசாமில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2020-06-02 22:30 GMT
கவுகாத்தி, 

அசாம் மாநிலம் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கரிம்கஞ்ச், சச்சார் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலையிலும் இந்த இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஹைலகண்டி மாவட்டம் மோகன்புர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 7 பேரும், சச்சார் மாவட்டத்தில் 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் ஆபத்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவில் பல வீடுகள், கட்டிடங்கள் சேதம் அடைந்து உள்ளன. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்த சோனாவால், மீட்புப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கிடையே ஹைலகண்டியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசித்த மாநில மந்திரி பரிமல்சுக்லவைத்யா, மீட்புப்பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் செய்திகள்