பாபர் மசூதி இடிப்பு வழக்கு; பாதுகாப்பு கவுன்சில் வாதங்களை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்துகிறது-சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு கவலை

பாதுகாப்பு கவுன்சில் வாதங்களை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்துகிறது என்று சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.

Update: 2020-08-29 03:00 GMT
லக்னோ, 

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோ‌ஷி, உமாபாரதி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு லக்னோவில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் பாதுகாப்பு கவுன்சில் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு 2 முறை அவகாசம் வழங்கிய போதும் வாதங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதையடுத்து 28-ந்தேதி (அதாவது நேற்று) வாதங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் வாதங்களை சமர்ப்பிக்காத பாதுகாப்பு கவுன்சில் தரப்பு மேலும் அவகாசம் கோரியது. இதையடுத்து நாளை மறுநாள் (31-ந்தேதி) வாதங்களை சமர்ப்பிக்க இறுதியாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பாதுகாப்பு கவுன்சில் தரப்பு வாதங்களை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நீதிபதி எஸ்.கே. யாதவ் கூறுகையில், ‘‘கோர்ட்டு 351 சி.பி.ஐ. சாட்சிகள் மற்றும் சுமார் 600 ஆதாரங்களை கையாள வேண்டும். இது கணிசமான நேரம் எடுக்கும். இதுபோன்ற சமயத்தில் வாதங்களை சமர்ப்பிப்பதில் தாமதத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது’’ எனக் கூறினார்.

மேலும் செய்திகள்