மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது - ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள ராகுல் காந்தி அவரைப் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்வதாக தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-26 03:54 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங்கின் 88வது பிறந்த நாளான இன்று, அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் கடந்த 2004-2014 வரை, இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார்.

மன்மோகன் சிங் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றுள்ள இவர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்திய நாடு தற்போது உணர்வதாகவும், அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்