8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-11-23 16:52 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. எனினும், டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியது மக்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, மணிப்பூர்  போன்ற சிறிய மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. 

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் குறைப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துவார் எனக்கூறப்படுகிறது. நாளை காலை 10.30 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம்  காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

இரண்டு கட்டமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் முதல் கட்டமாக 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி, அடுத்து யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாகவும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

மேலும் செய்திகள்