மராட்டிய தீ விபத்து: மின்கசிவே 10 குழந்தைகள் உயிரிழக்க காரணம்; சுகாதார மந்திரி தகவல்

மராட்டிய அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழக்க மின்கசிவே காரணம் என சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-01-09 08:14 GMT
பண்டாரா,

மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தீவிர விசாரணைக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மராட்டிய மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டாரா மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணியளவில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது.  இந்த சம்பவத்தில் அந்த பிரிவில் இருந்த 10 குழந்தைகள் உயிரிழந்தனர்.  இதுபற்றி அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட் கூறும்பொழுது, அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளன.  அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

இதனை அறிந்த குழந்தைகளின் உறவினர்களும் மருத்துவமனைக்கு அலறியடித்தபடி விரைந்து சென்றுள்ளனர்.  தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது.  போலீசாரும் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உடனடியாக சுகாதார மந்திரி ராஜேஷ் தோப், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு தீ விபத்து பற்றி விவரம் கேட்டறிந்து உள்ளார்.  இந்த தீ விபத்து பற்றி விசாரணை மேற்கொள்ளும்படியும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “மராட்டியத்தின் பண்டாராவில் இதய துடிப்பு நிற்கும் அளவிலான சோக சம்பவம். அங்கு நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம். என் எண்ணங்கள் துயரமடைந்த அனைத்து குடும்பங்களுடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “மராட்டியத்தில் பண்டாரா மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நான் வேதனையடைகிறேன். எனது எண்ணங்களும், இரங்கலும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை தாங்க கடவுள் அவர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியும், இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளார்.  தீ விபத்து பற்றி உடனடி விசாரணை வேண்டும் என முன்னாள் முதல் மந்திரி பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  குற்றவாளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் கேட்டு கொண்டார்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் சந்தீப் கதம் கூறும்பொழுது, அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன.  7 குழந்தைகளை காப்பாற்றி விட்டோம்.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உறுதி செய்ய தொழில்நுட்ப குழு விசாரணை மேற்கொள்ளும் என கூறினார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆனது, மாவட்ட பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி விசாரணை நடத்தி 48 மணிநேரத்திற்குள் உண்மை நிலவரம் அடங்கிய விவர அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்கும்படி பண்டாரா மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சுகாதார மந்திரி தோப் கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டு உள்ளது என எனக்கு தகவல் தெரிய வந்துள்ளது.  உயிரிழந்த குழந்தைகளில் 3 பேர் தீ விபத்தில் இறந்துள்ளனர்.  7 குழந்தைகள் தீப்புகையால் உயிரிழந்து உள்ளனர்.  குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்