இந்தியாவில் 6.5 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வீணாகின்றன; மத்திய அரசு தகவல்

‘நாடு முழுவதும் தற்போது வரை 3.51 கோடி டோஸ்கள் போடப்பட்டு விட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-03-17 19:17 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது வரை 3.5 கோடி டோஸ்களுக்கு மேல் போடப்பட்டு விட்டது. இந்த பணிகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் தற்போது வரை 3.51 கோடி டோஸ்கள் போடப்பட்டு விட்டன. 

இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுமே 1.38 கோடி ஆகும். கடந்த 15-ந் தேதி உலகம் முழுவதும் 83.4 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன. இதில் 36 சதவீதம் இந்தியாவில் போடப்பட்டது என்பது சிறப்புக்குரியது’ என்று தெரிவித்தார். 

நாடு முழுவதும் போடப்படாமல் வீணாகும் தடுப்பூசியின் அளவு 6.5 சதவீதம் எனக்கூறிய பூஷண், தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்கள் இந்த சராசரியை விட அதிகமான இழப்பை கொண்டிருக்கின்றன என்றும் கூறினார். எனவே விலைமதிப்பற்ற தடுப்பூசியை பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தி, வீணாவதை தடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்