கொரோனா தொற்று உயர்வு; வரலாற்று நினைவகங்களை மே 15ந்தேதி வரை மூட முடிவு

கொரோனா தொற்று உயர்வால் வரலாற்று நினைவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் வரும் மே 15ந்தேதி வரை மூடப்படுகின்றன.

Update: 2021-04-15 17:46 GMT
கோப்பு படம்
புதுடெல்லி,

நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்றின் புதிய அலை தீவிரமடைந்து உள்ளது.  நாள்தோறும் பாதிப்படைவோரின் எண்ணிக்கை 1 லட்சம் என்ற அளவை கடந்து வருகிறது.  கடந்த வாரத்தில் 10 லட்சம் பாதிப்புகள் பதிவான சூழலில், இன்று 2 லட்சம் என்ற எண்ணிக்கையை ஒரே நாளில் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.  அமெரிக்காவுக்கு அடுத்து உலக அளவில் அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்திய கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சக இணை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பெருந்தொற்றின் நடப்பு சூழ்நிலையை முன்னிட்டு மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவை தங்களால் பாதுகாக்கப்பட்டு வரும் அனைத்து நினைவகங்களையும் வருகிற மே 15ந்தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை மூடுவது என முடிவு செய்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச்சிலும், இதேபோன்ற சூழலில் இதேபோன்ற முடிவு எடுக்கப்பட்டது.  கடந்த ஆண்டு டிசம்பரில், தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியதும், இந்திய தொல்லியல் துறை பார்வையாளர்களின் எண்ணிக்கை வரம்பில் தளர்வு ஏற்படுத்தியது.  இதனால், அவர்களது வருகை அதிகரித்தது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் மீண்டும் அவற்றை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்