பெங்களூருவில் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு அக்காள்-தங்கை தற்கொலை

பெங்களூருவில் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு அக்காள்-தங்கை தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்.

Update: 2021-04-16 21:41 GMT
பெங்களூரு: பெங்களூருவில் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு அக்காள்-தங்கை தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்.

வயதான சகோதரிகள்

பெங்களூரு மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோபாலபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஜமுனா (வயது 60). இவரது சகோதரி ராணி (58). இவர்களது மற்றொரு சகோதரியான பிரேமா திருமணமாகி சாம்ராஜ்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி பணம் மூலமாக ஜமுனாவும், ராணியும் வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

பிரேமா தினமும் தன்னுடைய சகோதரிகளிடம் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால் கடந்த 2 நாட்களாக பிரேமா தனது சகோதரிகளிடம் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொண்ட போது, அவர்கள் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சகோதரிகளை பார்க்க கோபாலபுரத்திற்கு விரைந்து வந்தார். அப்போது வீட்டுக்கதவு பூட்டி கிடந்தது.

தற்கொலை

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஜமுனாவும், ராணியும் பிணமாக கிடந்தார்கள். தகவல் அறிந்ததும் மாகடி ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜமுனாவும், ராணியும் வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள், உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

என்றாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், சகோதரிகளின் சாவுக்கான காரணம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்