மும்பையில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பைக்கு இன்றும், நாளையும் (திங்கட்கிழமை) ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-06-13 01:19 GMT
மும்பை,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.
 மாநில தலைநகர் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை பருவமழை தொடங்கியது. முதல் நாள் கொட்டி தீர்த்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. 

மேலும் மால்வாணியில் கட்டிடம் இடிந்து 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல வியாழக்கிழமை பெய்த மழைக்கு தகிசரில் வீடு இடிந்து 26 வயது பெண் உயிரிழந்தார். இந்தநிலையில் நகரில் 4-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. காலை முதலே மழை இடைவிடாமல் வெளுத்து கட்டியது.

இதன்காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் நேற்று பல இடங்களில் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதேபோல நேற்று பெய்த பலத்த மழையால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. 

இந்தநிலையில் மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிதீவிர மழை பெய்யும் என்று விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இன்றும், நாளையும் (திங்கட்கிழமை) ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ஆரஞ்ச் அலர்ட் என்பது எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை குறிப்பதாகும். 

எனவே 2 நாட்கள் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து பொது மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மேலும் செய்திகள்