சுவேந்து அதிகாரி வெற்றிக்கு எதிராக மம்தா தாக்கல் செய்த மனு மீது 24 ஆம் தேதி விசாரணை

நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2021-06-18 06:57 GMT
கொல்கத்தா,

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த மே மாதம் 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 210-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில், முதல் மந்திரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, புர்பா மெட்னிபுர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். 
குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து,  மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு  இன்று காலை நீதிபதி கவுசிக் சந்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர், மனு மீதான விசாரணையை ஒருவாரம் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி, “ இந்த மனு அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு  பட்டியலிடப்படட்டும். அதேவேளையில், மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு இணங்கி  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்பதை நீதிமன்ற பதிவாளர் உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்வார்” எனறார். இதன்படி, இந்த மனு மீதான விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகள்