15 நாட்களுக்குள் சட்டசபையை கூட்ட வேண்டும் குமாரசாமி வலியுறுத்தல்
பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க 15 நாட்களுக்குள் சட்டசபையை கூட்ட வேண்டும் என அம்மாநில அரசுக்கு குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.;
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் பெட்ரோல் விலை ரூ.100-யை தாண்டி உள்ளது. டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு செல்கிறது. அதுபற்றி பா.ஜனதாவினர் யாரும் பேசுவதில்லை. கொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை குறைத்தால் ரூ.30-க்கு தான், அவற்றை விற்பனை செய்ய முடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும். இதற்காக இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபை கூட்டத்தை தொடரை அரசு கூட்ட வேண்டும். சட்டசபையை கூட்டவில்லை எனில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.