ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டம்
4 ஆண்டுகளில் மூன்றாவது ஏவுதளத்தை உருவாக்கி, செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.;
ஸ்ரீஹரிகோட்டா,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. 175 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட ஸ்ரீஹரிகோட்டா வளாகம், சென்னையிலிருந்து சுமார் 135 கி.மீ கிழக்கே அமைந்துள்ளது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி நிறுவனத்தின் மூலம் இங்கிருந்து பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன.
தற்போது இங்கு 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. முதல் ஏவுதளம் 1990-களின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. இந்த ஏவுதளத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது. இரண்டாவது ஏவுதளம் 2005-இல் செயல்பாட்டுக்கு வந்தது. ராக்கெட் ஏவுவதற்கான தேவை அதிகரித்ததன் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த இரண்டாவது ஏவுதளத்திலிருந்து 2005-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி பத்மகுமார் கூறியதாவது; ”தற்போது 12,000 முதல் 14,000 கிலோவுக்கு மேல் எடையுள்ள பெரிய செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்கு பெரிய ராக்கெட் ஏவுதளங்கள் நமக்கு தேவை. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது பெரிய ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. 4 ஆண்டுகளில் மூன்றாவது ஏவுதளத்தை உருவாக்கி, செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.” இவ்வாறு அவர் கூறினார்.