5 ஆண்டுகளில் அமெரிக்காவை விட சவுதி அரேபியாவில் இருந்து அதிக இந்தியர்கள் நாடு கடத்தல் - மத்திய அரசு தகவல்
2025-ம் ஆண்டில் இதுவரை 7,019 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவை விட சவுதி அரேபியாவில் இருந்து அதிக இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வெளிநாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கும், நாடு கடத்தப்படுவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் விசா அல்லது குடியிருப்பு அட்டையின் காலக்கெடு முடிந்த பிறகும் தங்கியிருப்பது, பணி அனுமதி இல்லாமல் வேலை செய்வது, தொழிலாளர் விதிமுறைகளை மீறுவது, முதலாளியிடம் இருந்து தப்பி ஓடுவது மற்றும் சிவில் அல்லது குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வது போன்றவை அடங்கும்.
2021 முதல் 2025 வரை உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வழங்கிய தரவுகளின்படி, 2021-ல் 8,887 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர், அதைத் தொடர்ந்து 2022-ல் 10,277 பேர், 2023-ல் 11,486 பேர், மற்றும் 2024-ல் 9,206 பேர் நாடு கடத்தப்பட்டனர். 2025-ம் ஆண்டில் இதுவரை 7,019 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவாகவே உள்ளது. வாஷிங்டனில் உள்ள தூதரகம் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்து பின்வரும் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது: 2021-ல் 805 பேர், 2022-ல் 862 பேர், 2023-ல் 617 பேர், 2024-ல் 1,368 பேர், மற்றும் 2025-ல் 3,414 பேர். இந்த எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் வளைகுடா நாடுகளை விட மிகக் குறைவாகவே உள்ளது.
அமெரிக்காவில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானவை வாஷிங்டன் (3,414) மற்றும் ஹூஸ்டனில் (234) பதிவாகியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை நாடு கடத்திய மற்ற நாடுகளில் மியான்மர் (1,591), ஐக்கிய அரபு அமீரகம் (1,469), பஹ்ரைன் (764), மலேசியா (1,485), தாய்லாந்து (481), மற்றும் கம்போடியா (305) ஆகியவை உள்ளன.
வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அரசாங்கம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. இந்திய தூதரகங்கள் இந்திய குடிமக்களை மீட்பது மற்றும் தாயகம் அழைத்து வருவது தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் தீவிரமாக எடுத்துரைக்கின்றன.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.