சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

எஸ்.சி., எஸ்.டி.யை தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Update: 2021-07-21 03:10 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ரிதேஷ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துமூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

மியான்மர் நாட்டை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் உள்பட சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். ேராகிங்கியா அகதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வருகின்றன.

அவர்களை வெளியேற்றக்கூடாது என்று வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களை வெளியேற்ற சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:-

கடந்த பிப்ரவரி 7-ந் தேதி, உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்து, ரிஷிகங்கா ஆற்றில் விழுந்ததில், அதன் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில், 80 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டதாகவும், 204 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒரு நீர்மின் நிலையம் அடித்துச் செல்லப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய கேள்விக்கு நித்யானந்த் ராய் கூறியதாவது:-

நாடாளுமன்றம், சட்டசபைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமே அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆகவே, மக்கள்தொகை கணக்கெடுப்பில், அவர்களது சாதிவாரி விவரம் மட்டும் சேகரிக்கப்படுகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதி விவரங்களை சேகரிக்க மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ேகாரிக்கை விடுத்துள்ளன. ஆனால், எஸ்.சி., எஸ்.டி.யை தவிர, இதர சாதிகளின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

கொரோனா காரணமாக, 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நடப்பு நிதியாண்டுக்கான முதலாவது துணை மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்தார். ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்துக்கு அவர் சபையின் ஒப்புதலை கோரினார்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தபோது கூறியதாவது:-

கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் அதிகரித்து இருப்பதாக பத்திரிகை செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் வசிப்பவர்களின் பணத்தை ஆய்வு செய்ய இந்த புள்ளிவிவரத்தை பயன்படுத்தக்கூடாது.

இருப்பினும், குறிப்பிட்ட வழக்குகளில், சுவிஸ் அரசை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்று வருகிறோம். இதற்காக இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் அமலில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்