சர்ச்சைக்குரிய அம்பகார் கோட்டையில் பழங்குடியினர் கொடியை ஏற்றிய பா.ஜனதா எம்.பி

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே உள்ள முக்கியமான நினைவுச்சின்னமான அம்பகார் கோட்டை தொடர்பாக அங்குள்ள மீனா பழங்குடியினருக்கும், இந்து அமைப்புகளுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகிறது.;

Update:2021-08-02 06:10 IST
இதன் தொடர்ச்சியாக அந்த கோட்டையில் ஏற்றப்பட்டிருந்த காவி கொடியை சுயேச்சை எம்.எல்.ஏ.வும், மீனா சமூகத்தை சேர்ந்தவருமான ராம்கேஷ் மீனா கடந்த ஜூன் மாதம் அகற்றினார்.இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில் பா.ஜனதா எம்.பி.யும், மீனா சமூகத்தை சேர்ந்தவருமான கிரோரி மீனா, 1-ந்தேதி (நேற்று) அந்த கோட்டையில் பழங்குடியினர் கொடியை ஏற்றப்போவதாக அறிவித்திருந்தார். இதனால் அங்கு பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.எனினும் தனது ஆதரவாளர்களுடன் நேற்று அதிகாலையில் அந்த கோட்டைக்கு வந்த கிரோரி மீனா, அங்கிருந்த பாதுகாப்பையும் மீறி கோட்டையின் பின்புறத்தில் பழங்குடியினருக்கான வெண்கொடியை ஏற்றினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். எனினும் மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே கிரோரி மீனா கைது செய்யப்பட்டதாக கூறி முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, மாநில பா.ஜனதா தலைவர் சதிஷ் பூனியா உள்ளிட்டோர் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்