கொரோனா இறப்பு பதிவிடுவதில் குறைபாடா? மத்திய அரசு விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்படாமல் தவறலாம். ஆனால் இறப்பு பதிவுகள் தவற வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது.

Update: 2021-08-04 20:40 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இறப்பு தொடர்பான அரசின் புள்ளிவிவரம் சரியானதுதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கொரோனா தொற்றின் 2-வது அலையின்போது சுகாதார அமைப்புகள் நாடெங்கும் திறமையான மருத்துவ மேலாண்மையில் கவனம் செலுத்தின. இதன் காரணமாக பாதிப்புகளை சரியாக அறிக்கையிடுவதிலும், இறப்புகளை பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்படலாம். ஆனால் விடுபட்ட கணக்குகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பின்னர் சரிசெய்து விடுகின்றன.

8 மாநிலங்களில் இறப்புகளை குறைத்து அறிக்கையிட்டிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இறப்புகளை மதிப்பிட முடியும். இருப்பினும் சரியான தரவு ஒருபோதும் அறியப்படாது. சிவில் பதிவு முறையில், சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பில் எல்லா வகையிலான இறப்பும் பதிவாகிறது.

கொரோனா இறப்புகள் பதிவு தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது. உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட அளவிலான, தேதிவாரியான விவரங்களுடன் தவற விடப்பட்ட இறப்புகளை தெரிவிக்கவும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டன.

மேலும் சட்ட அடிப்படையிலான அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளும் பதிவு செய்யப்படுவதை சிவில் பதிவு அமைப்பு உறுதி செய்கிறது.

எனவே கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படாமல் போகலாம். இறப்பைப் பொறுத்தமட்டில் முற்றிலும் பதிவு தவறுவதற்கான வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்