திருப்பதியில் அதிக ஒலி எழுப்பிய வாகனங்களின் புகைப்போக்கிகளை ரோடு ரோலரால் நசுக்கி அழித்த போலீசார்

திருப்பதியில் அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து ரோடு ரோலரால் நசுக்கி அழித்தனர்.

Update: 2021-08-05 21:12 GMT
திருப்பதி,

திருப்பதி போக்குவரத்துக் காவல் துறை வளாகத்தில் புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலாநாயுடு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“திருப்பதி ஆன்மிக நகரம் ஆகும். திருப்பதியில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. அதில் இருந்து வரும் புகையால் காற்று மாசுபடுகிறது. வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலி (ஹாரன்) மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது. பெரும்பாலான இரு சக்கர வாகனங்களில் உள்ள புகைப்போக்கி, ஒலிப்பான்கள் ஆகியவற்றை மாற்றியமைத்து அதிக சத்தம் எழுப்பி மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு செய்த வாகனங்கள் கண்டறியப்பட்டன.

அந்த வாகனங்களை மடக்கி அதன் புகைப்போக்கி, ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை, போக்குவரத்துக் காவல் அலுவலக வளாகத்தில் வரிசையாக அடுக்கி வைத்து சாலை போட பயன்படுத்தப்படும் ரோடு ரோலரால் நசுக்கி அழிக்கப்பட்டு வருகின்றன.

பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கும் இரு சக்கர வாகனங்களில் சாதாரணமாக சத்தம் எழுப்பக்கூடிய புகைப்போக்கி, ஒலிப்பான் ஆகியவற்றை பொருத்தியிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கைக்குழந்தைகளின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக சத்தம் அவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹாரனை அதிக சத்தத்தில் ஒலிக்க செய்து சாலையில் செல்லும் பொதுமக்கள், பக்தர்களை பயமுறுத்துகிறார்கள். 65 டெசிபலுக்குமேல் சத்தம் எழுப்பும் இருசக்கர வாகனங்கள் கண்டறியப்பட்டு புகைப் போக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பதியில் பல மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள் மற்றும் பிற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதிக சத்தம் எழுப்பாமல் செல்ல வேண்டும். அப்படி சென்றால் அனைவருக்கும் நல்லது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்