தடுப்பூசி சான்றிதழ், வெளிநாட்டு பயணத்துக்கு முக்கியம்: மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

என்ன தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள் என்பதைவிட, தடுப்பூசி சான்றிதழ்தான் வெளிநாட்டுப்பயணத்துக்கு முக்கியம் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

Update: 2021-08-13 17:42 GMT
இடையூறு இல்லாமல் பயணம்
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) வருடாந்திர கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடந்தது. இதில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று ‘உலகளாவிய பங்களிப்புக்காக புதிய இந்தியாவை வடிவமைக்கிறீர்களா?’ என்ற அமர்வில் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-
வெளிநாடுகளில் பயணம் செய்கிற இந்தியர்கள், கொரோனா தடுப்பூசியைப் பொறுத்தமட்டில், குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதை உறுதி செய்வது என்பது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். குறிப்பாக வெளிநாடுகளில் இந்தியர்கள் இடையூறு இல்லாமல் பயணம் செய்வது எனது அமைச்சகத்தின் முன்னுரிமை ஆகும்.இந்தியாவும், இந்தியர்களும் உலகளாவிய பணியிடமாக உலகத்தை பார்க்கிறார்கள்.

தடுப்பூசி சான்றிதழ் முக்கியம்
சர்வதேச அளவில் செல்வதும், இடம் பெயர்தலும் மிக முக்கியமான ஒன்றாக மாறி இருக்கிறது. என்ன தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள் என்பதை விட தடுப்பூசி சான்றிதழ் வெளிநாட்டுப்பயணத்துக்கு முக்கியமாக உள்ளது. இந்தியா இதை பல நாடுகளுடன், இரு தரப்பிலும் எடுத்துச்செல்கிறது. பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் தலைமைத்துவத்தில் அத்தியாவசிய மருத்துவ வினியோகங்களுக்காக பல நாடுகள் போட்டி போட்டன. ஆனால் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துகள், கருவிகள், தடுப்பூசிகள் போன்றவற்றை வழங்கி உறுதியான, பயனுள்ள நாடாக திகழ்ந்தது. தேவையான பொருட்கள் கிடைக்காத பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வினியோகம் செய்தது. இதற்காக உலகமெங்கும் பல நாடுகள் நமது முயற்சிகளை பாராட்டின. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது கட்டத்தில் பல நாடுகள் நமக்கு திரும்ப உதவின.

குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
2022-க்கு அப்பால் இந்தியா என்பதற்கான செயல்திட்டத்தை வகுப்பதற்கு, நாடு திறன்கள் மற்றும் வினியோகச்சங்கிலிகளை உருவாக்க முதலீடு செய்ய வேண்டும். இதற்கான தளத்தை வழங்குவதற்கான ஒரு முழுமையான அணுகுமுறைதான் ஆத்மநிர்பர் பாரத் என்னும் சுயசார்பு திட்டம் ஆகும். வர்த்தகம் மற்றும் வணிக உறவுகளைப் பொறுத்தமட்டில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் தாராள வர்த்தக ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. நாம் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலன்களை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் உள்நாட்டுச் சந்தையில் ஒரு சம நிலையைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்