6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் ரூ.905 கோடி கையிருப்பு? - அதிகாரிகள் விளக்கம்

பீகாரில் 6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் 905 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக வெளியான தகவல் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Update: 2021-09-18 02:40 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் கதிஹர் மாவட்டத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் குருசந்திரன் விஷாஸ் மற்றும் அஷித் குமார். இந்த மாணவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என தெரிந்துகொள்வதற்காக உத்தர்பீகார் கிராம வங்கிக்கு சென்றுள்ளனர்.

அங்கு மாணவர்கள் இருவரும் தங்கள் வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு தொகை எவ்வளவு உள்ளது என்பது குறித்து வங்கி கணக்குப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். 

அதில், குருசந்திரன் விஷாஸ் வங்கி கணக்கில் 905 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அஷித் குமார் வங்கி கணக்கில் 62 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி கணக்குப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்தது. 

மேலும், இருவரின் வங்கி கணக்கு விவரங்கள் தொடர்பாக வங்கி கணினியிலும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், 2 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரும் இன்ப அதிர்ச்சியடைந்தனர். 

இருவரின் வங்கி கணக்கையும் சேர்த்தால் மொத்தம் 967 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் வங்கிக்கணக்கில் இவ்வளவு தொகையை செலுத்தியது யார்? என்பது குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பீகார் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், 2 மாணவர்களின் வங்கி கணக்கில் 967 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் குருசந்திரன் விஷாஸ் மற்றும் அஷித் குமார் வங்கி கணக்கில் யாரும் 967 கோடி ரூபாய் செலுத்தவில்லை. வங்கி சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இரு மாணவர்களின் வங்கி கணக்குகளில் 967 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது போன்று தவறாக காட்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்