மத்திய அரசு இரட்டை இன்ஜின் கொண்டு செயல்படுகிறது - பிரதமர் மோடி

அனைவருக்கும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-28 10:18 GMT
திஸ்பூர்,

அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், கர்பி அங்லாங்கில் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் கூறியதாவது;-

“அனைவருக்கும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் செயல்படும் மத்திய அரசு இரட்டை இன்ஜின் கொண்டு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது. கடந்த ஆண்டு, கர்பி அங்லாங்கில் இருந்து பல அமைப்புகள் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான தீர்மானத்தில் இணைந்தன. 

‘போடோ’ ஒப்பந்தம் நீடித்த அமைதிக்கான புதிய கதவுகளைத் திறந்தது. சமீபத்தில் அசாமில் உள்ள 23 மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் வடகிழக்கில் எல்லைப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. 

அசாமில் வெறுப்பு அரசியலின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கிராமங்களின் வளர்ச்சியே இந்தியாவை வளர்ச்சியடைய செய்யும்.”

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும் செய்திகள்