அசாம் சட்டசபையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷம் - அமளியில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

Update: 2023-03-29 16:39 GMT

கவுகாத்தி,

வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியதோடு, பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். எம்.எல்.ஏ.க்களின் அமளியால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதில் இருவர் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்