கெஜ்ரிவால் கைது; சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்ய முடிவு

சுப்ரீம் கோர்ட்டு இன்றிரவே அவசர வழக்காக இதனை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுள்ளோம் என அக்கட்சியின் மந்திரியான அதிஷி தெரிவித்து உள்ளார்.

Update: 2024-03-21 16:57 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது.

ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்ற நிலையில், கெஜ்ரிவாலின் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், இன்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை இன்று கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர். கலவரம் பரவாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. அதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் மந்திரியான அதிஷி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், அமலாக்க அதிகாரிகளின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, அதனை அதனை சட்டப்படி செல்லாதது என அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு இன்றிரவே அவசர வழக்காக இதனை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுள்ளோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்