பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு அரசியல் சதி - சிராக் பாஸ்வான் தாக்கு

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு அரசியல் சதி என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2023-10-03 23:07 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அந்த மாநில அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் நேற்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், 'பீகார் அரசு வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களில் அரசியல் சதி தெளிவாக தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி அரசியல் ஆதாயம் பெறும் வகையில் அதன் எண்ணிக்கை கூட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் பல சாதிகளைச் சேர்ந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையைவிட குறைத்து காட்டப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

மேலும் சிராக் பாஸ்வான், 'தனது விருப்பம்போலும், அரசியல் பலன் பெறும் வகையிலும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. எனது சாதியான பாஸ்வான் எண்ணிக்கையும் கூட குறைத்து காட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில் நாங்கள் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை நிராகரிக்கிறோம்.

எனவே முழு வெளிப்படைத்தன்மையுடன் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்த வேண்டும். அப்போதுதான் அது மக்களுக்கு பயனளிப்பதாக அமையும்' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்