குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜ.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: கெஜ்ரிவால் பேச்சு

குஜராத்தில் 2 தேர்தல் வாக்குறுதிகளை முன்பே அள்ளி வீசிய கெஜ்ரிவால் 3வது முறையாக என்ன வாக்குறுதி வழங்க உள்ளார் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Update: 2022-08-06 10:00 GMT



புதுடெல்லி,



குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இந்த முறை அக்கட்சிக்கு போட்டியாக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதுதவிர, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஆளும் பா.ஜ.க.வின் பி மற்றும் சி அணிகளே இந்த இரு கட்சிகள் என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்த பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது.

தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை வரிசையாக செயல்படுத்தியும் வருகிறது. இதனை தொடர்ந்து குஜராத்திலும் தனது தேர்தல் வேட்டையை ஆம் ஆத்மி தொடங்கி நடத்தி வருகிறது. இதன்படி குஜராத்துக்கு கடந்த ஜூலை 21ந்தேதி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவர் சூரத் நகரில் மக்களிடையே கூட்டத்தில் பேசும்போது, அனைத்து உள்ளூர் நுகர்வோர்களுக்கும் நாங்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என கூறினார்.

இதுதவிர, அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் 24x7 என்ற வகையில் மின்சார வினியோகம் கிடைக்க உறுதி செய்வோம். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரையிலான நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டண பில்களையும் தள்ளுபடி செய்வோம் என கூறி ஆச்சரியம் ஏற்படுத்தினார்.

இந்நிலையில், கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜ.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார். அவர்கள் ஆணவத்துடன் நடந்து வருகின்றனர். டெல்லி முதல்-மந்திரியாக இருந்தும் கூட குஜராத்தில் விஷ சாராயத்தில் பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தேன். இந்த சம்பவத்தில், குஜராத் முதல்-மந்திரி அவர்களை சந்திக்க கூட செல்லவில்லை. தற்போது அவர்களுக்கு மாற்று ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

வாராவாரம், குஜராத்திற்கு செல்லும் வழக்கத்திற்கு கெஜ்ரிவால் மாறியுள்ளார். இதற்கு முன்பு, குஜராத்திற்கு வருகை தந்த கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன் 2 வாக்குறுதிகளை அளித்து உள்ளார். அவற்றில் ஒன்று, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது. மற்றொன்று, அனைத்து வேலையில்லா நபர்களுக்கும் வேலை அல்லது மாதம் ஒன்றிற்கு ரூ.3 ஆயிரம் வழங்குவது ஆகும்.

இந்நிலையில், இந்த முறை குஜராத் பயணத்தில் கெஜ்ரிவால் 3வது வாக்குறுதியாக என்ன வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். அவர், குஜராத்துக்கு இன்று 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். எனினும், இந்த முறை பழங்குடியின மக்களுக்கு ஆதரவான உத்தரவாதம் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்