2024 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான ரகசியங்களை வெளியிட்ட சுப்ரமணியன் சுவாமி

2024 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான ரகசியங்களை அக்கட்சியின் முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டு உள்ளார்.

Update: 2023-02-05 06:16 GMT


புதுடெல்லி,


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. தற்போது இருந்தே தொடங்கி விட்டது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டன. வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. ரெயில்வே துறைக்கு ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதுபோன்று இ-கோர்ட்டுகள், மகளிர் நலன் உள்ளிட்ட பல்வேறு விசயங்களும் பட்ஜெட்டில் கவனத்தில் கொள்ளப்பட்டன.

எனினும், தேர்தலை கவனத்தில் கொண்டே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், வரவிருக்கிற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான ரகசியங்களை அக்கட்சியின் முன்னாள் எம்.பி.யான சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டு உள்ளார்.

அதில், இந்தியா மற்றும் சீனா இடையேயான பதற்றம் நிறைந்த எல்லை பகுதியில் படைகள் குவிக்கப்பட்ட சூழலை குறிப்பிட்டு கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே ஒரு நீண்டகால பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்ட சூழலிலும், சீனா அதனை மதிக்காமல் நடந்து கொண்டுள்ளது. ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்டு உள்ளது.

இதனை இந்தியா பலமுறை கடந்த காலங்களில் சுட்டி காட்டியுள்ளது. எனினும், எல்லையில் படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கைகள், ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வழியே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், சீனாவை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியம் பற்றி பா.ஜ.க. முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சுவாமி சுட்டி காட்டி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அசல் எல்லை கோட்டு பகுதியில் 1996-ம் ஆண்டில் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ள நிலையிலும், 2014-ம் ஆண்டுக்கு பின்னர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நில பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் பெறும் வரையில், சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவ கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும்.

சீனாவை எதிர்கொள்வதற்கான, இதுவரை வெளியிடப்படாத ரகசிய தகவல்கள் ஏதேனும் பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்றால், அவர் தானாக முன்வந்து அவற்றை வெளியிட வேண்டும். அப்படி செய்யும்போது, 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்